வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்படுத்தும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் தீராத வினைகளை தீர்த்து பக்தர்கள் மனதில் நி்ம்மதியை நிலையாக இருக்க செய்கிறார். இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்பிகை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு வாய்ந்தது இக்கோவில்.
புண்ணிய பூமி இங்குள்ள ஈஸ்வரனை முப்பத்து முக்கோடி தேவர்களும் 4 வேதங்களும் வழிபட்டதாகவும், எமதர்மர் மற்றும் சித்ரகுப்தருக்கு சனி தோஷத்தை இக்கோவிலில் உள்ள இறைவன் நீக்கியதாகவும் புராண வரலாறுகள் கூறுகிறது. இத்தலம் உள்ள ஊரான திருக்கோடிக்காவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு, சுடுகாடு கிடையாது. காவிரி ஆறு வடக்கு நோக்கி உள்ளது. நந்தி பெருமானின் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் இக்கோவிலின் வாசலில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி திருக்கோடீஸ்வர பெருமானை வழிபடுவோருக்கு எம பயம் , பிதுர் சாபம் நீங்கி புத்திர பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
சன்னதிகள் கோவிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் காணப்படுகின்றன. இடது புறம் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மர கணபதி, பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சமூர்த்தி அலங்கார மண்டபம், திரிபுர சுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. எதிரே நர்த்தன விநாயகர் உள்ளார். அம்மன் சன்னதியின் வலப்புறம் ஆடிப்பூர அம்மன் உள்ளார். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அடுத்து நடராஜர் சன்னதி உள்ளது. உள் மண்டபத்தில் வலப்புறம் சித்திரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வெளித்திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலியார், கணபதி, நாகர்,விசுவநாதர் விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகேசர் சன்னதிகள், கரையேற்று விநாயகர் சன்னதிகள் உள்ளன.
கரையேற்று விநாயகர் அடுத்து ரிக்வேத லிங்கம், யஜுர் வேத லிங்கம், சாமவேத லிங்கம், அதர்வணவேத லிங்கம் உள்ளன. தொடர்ந்து கஜலட்ஜமி, ஷேத்ரபாலகர்கள், வடுக பைரவர், சூரியன், சந்திரன், நாகேஸ்வரர், சண்டபீடேஸ்வரர், கஹானேஸ்வரர் உள்ளனர். பால சனீஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. கருவறை கோஷ்டத்தில் நடராஜர், சிவகாமி, கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிட்சாடணர், அஷ்டபுஜ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், அடுத்து சூரிய மண்டல பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோவில் பிரகாரத்தில் வலதுபக்கம் வீற்றிருக்கும் பிள்ளையார் பல்வேறு சிறப்புகளை உடையவர்.
முற்காலத்தில் காவிரி வெள்ளத்தில் மூழ்கிய முனிவர்களை கரையேற்ற வேண்டி துர்வாச முனிவர் மணலால் விநாயகரை செய்து வழிபட்டார். பின்னர் காவிரி வெள்ளத்திலிருந்து முனிவர்களை விநாயகர் மீட்டார் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த விநாயகருக்கு கரையேற்று விநாயகர் என்ற பெயர் வந்தது. இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் மட்டுமே சாற்றி வழிபட்டு வருகின்றனர். வடுகபைரவர் இதைப்போல துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வடுகபைரவர் பெருமானை வழிபடுவோருக்கு வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு வந்து எமதர்மர், சித்ரகுப்தரை வணங்குவோருக்கு மரண அவதி, எமபயம் இல்லை என கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பிரம்பு ஆகும். இக்கோவிலின் மூலவரான திருக்கோடீஸ்வரருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட நாகாபரணம் சாற்றப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கல்வெட்டு சிற்பங்கள் இக்கோவில் ராஜகோபுரத்தின் இருபுரத்திலும் தேரோட்ட நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான வடிவத்தில் தேர்காட்சிகளும், நமது பாரம்பரிய நடன அபிநயங்களை சித்தரிக்கும் வகையில் நடன காட்சிகளும், யானை போர் போன்ற காட்சிகளும், கருங்கல்லில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவாமி சன்னதியினை சுற்றி கல்வெட்டுகளும் காணப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்தரை மாதத்தில் பிரம்மோற்சவம் மற்றும் சித்ராபவுர்ணமி உற்சவம், புரட்டாசி மாதத்தில் அம்பாள் வேங்கடாஜலபதியாய் காட்சிதருதல், ஐப்பசி அன்னாபிஷேகம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் சன்னதியில் நுழைவுவாயில் சுமார் 60அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100 அடி உயரத்தில் பிரதான ராஜகோபுரமும், 50 அடி உயரத்தில் சுவாமியின் நுழைவு ராஜகோபுரமும், சுவாமி, அம்பாள் விமானங்கள், பஞ்சமூர்த்தி மண்டபங்கள், மடப்பள்ளி பெரியகருங்கல் மதில் சுவர்கள் கொண்ட பிரகாரங்களும் காணப்படுகிறது. கோவிலின் 4 வீதிகளிலும் விநாயகருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கோவிலுக்குசெல்வது எப்படி? தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 18 கி.மீட்டர் பயணித்து திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.