No results found

    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்- திருவடிசூலம்


    மூலவர் – ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர்

    உற்சவர் – சந்திரசேகர் 

    அம்மன் – இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை 

    தல விருட்சம் – வில்வம் 

    தீர்த்தம் – மதுரா தீர்த்தம் 

    மாவட்டம் – காஞ்சிபுரம் 

    சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏறஏற, வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் கலயம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரைப் பருகக் கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் "நீங்கள் யார்?" என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றிக் கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி, தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான்.

    இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை. இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்" என்றெண்ணிக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, "இடைச்சுரநாதா" என்று வணங்கி, பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்" என்ற பெயரும் பெற்றார்.

    பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கிப் பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்" என்றும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை" (கோ – பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.

    பொதுவாக அம்பாள் தன் பாதங்களை ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலைப் பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள். "திருஞானசம்பந்தன், நீ கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.

    இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வணங்கிச் சென்றுள்ளனர். மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி பளபளப்புடன் இருக்கிறார். பிரதான வாயில் தெற்கு பக்கம் இருக்கிறது. தீப ஆராதனையின் போது இலிங்கத்தில் பிரகாசமாக ஜோதி தெரிவது சிறப்பு. ஜோதி ரூபனாக சுவாமியை தரிசித்தால் தீய குணங்கள் மறையும், வாழ்க்கை பிரகாசமடையும் என்பது நம்பிக்கை. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார். பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் "காட்சிக்குளம்" என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது. தலவிநாயகர்: வரசித்தி விநாயகர். கோயிலில் பிரமாண்டேஸ்வரருக்கும், பிரமாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. திருவிழா: சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்ஸவம். பிரார்த்தனை: இங்கு வேண்டிக்கொள்ள முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தலவிருட்சத்திற்கு வஸ்திரம், மஞ்சள் கயிறு கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும். 

    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், 

    திருவடிசூலம், 

    திருஇடைச்சுரம், 

    செங்கல்பட்டு, 

    காஞ்சிபுரம் மாவட்டம்.

    Previous Next

    نموذج الاتصال