No results found

    60 அடி உயர சுயம்பு லிங்கம் கோவில்- ஆந்திர மாநிலம்


    ராமாயண இதிகாசத்தில் இடம் பிடித்திருக்கும் நபர்களில் முக்கியமானவர், சுசேணர். இவர் வானர அரசனான வாலியின் மாமனார் ஆவார். இவர் சிறந்த வானர மருத்துவரும் கூட. ராவணனுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ராவணனின் மகன் மேகநாதன் வீசிய நாகாஸ்திரம் தாக்கி, லட்சுமணன் சுயநினைவை இழந்தான். அவனது உயிரைக் காப்பதற்கான மூலிகை , சஞ்சீவி மலையில் இருப்பதாக குறிப்பறிந்து சொன்னது, சுசேணர்தான். ராமருக்கும் ராவணனுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்று, ராவணன் கொல்லப்பட்டான். பின்னர் ராமர், சீதை மற்றும் தனக்கு உதவி புரிந்தவர்களுடன் அயோத்தி புறப்பட்டுச்சென்றார் . அப்போது சுசேணர், சுமங்சபர்வம் என்ற மலையில் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்தார். அவர் அங்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

    அவர்களுக்கு உதவ நினைத்து சுசேணர், அந்தப்பகுதியிலேயே தங்கிவிட்டார். திடீரென்று ராமருக்கு சுசேணரின் நினைவு வர, அவர் எங்கிருக்கிறார் என்று பார்த்து வரும்படி அனுமனை அனுப்பினார். அனுமனும் அங்கு இங்கென்று அலைந்து திரிந்து விட்டு, இறுதியாக இந்தப் பகுதிக்கு வந்தார். ஆனால் அங்கு, சுசேணர் சமாதி அடைந்திருந்தார். இதனால் வருத்தம் கொண்ட அனுமன், அவர் உடல் மீது மான் தோலை வைத்து மூடி, அதன் மேல் சில மல்லிகை மலர்களை வைத்து விட்டு, ராமரிடம் சென்று நடந்ததைக் கூறினார். ராமரும், சீதை மற்றும் லட்சுமணனுடன் அங்கு வந்து மான்தோலை அகற்றி பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் வளரத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தில் இருந்த புஷ்கரணியில் அனைவரும் நீராடிவிட்டு அங்கிருந்து சென்றனர். சிவலிங்கம் வளர வளர, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் உடல்நலம் பெறத்தொடங்கினர்.

    இங்குள்ள சிவலிங்கம் அந்தப் பகுதி மக்களால் 'மல்லிகார்ஜூன சுவாமி' என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் மான் தோலுக்கு 'அஜினா' என்று பொருள். மான் தோலும், மல்லிகைப் பூவும் வைக்கப்பட்ட இடத்தில் தோன்றிய சுயம்புலிங்கம் என்பதால் இதற்கு 'மல்லிகாஜினா சுவாமி' என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தை, பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வழிபட்டதாகவும், அதனால் இத்தல இறைவனின் பெயர் 'மல்லிகார்ஜூன சுவாமி' என்று மாறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும். இந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னன், சுயம்பு லிங்கத்திற்கு கோவில் அமைக்க எண்ணினான். ஆனால் அவனது கனவில் தோன்றிய ஈசன், தான் கருவறைக்குள் இருக்க விரும்பவில்லை என்றும், என்னை தொட்டு பக்தர்களை சென்றடையும் காற்று, அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றும் கூறினார். இதனால் கோவில் அமைக்கப்படவில்லை. பெரிய தண்ணீர் தொட்டிக்கு இருப்பது போல கீழே சில தூண்களும், சிவலிங்கத்தின் மேற் பகுதியை தரிசிக்கும் வகையில் பக்தர்கள் நிற்கும் வகையில் சுற்று பாதை போன்ற மேற்தளமும் அமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் கோவில் அமைப்பு போன்ற சுவர் மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال