No results found

    திருக்கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்


    மூலவர் – அக்னீஸ்வரர்

    அம்மன் – கற்பகாம்பாள் 

    தல விருட்சம் – பலா 

    தீர்த்தம் – அக்னி தீர்த்தம், 

    பராசர தீர்த்தம் பழமை – 1000 வருடங்களுக்கு 

    முன் முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக்குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

    ஹரதத்தருக்கு உபதேசித்து அருள்செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர். ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

    சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார். இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு" என்று அருளிச்செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    பிராமணர் ஒருவர் புல் கட்டைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரைத் தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்துவந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து, "கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்" என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு.

    பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது, பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது, அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது, சந்திரனின் சாபம் நீங்கியது, கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்கு திருமணம் நடந்தது, மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதாரத் தலம். மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற, நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானச புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு "கவி" என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர், சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்க செய்யும் "அமிர்த சஞ்சீவி" மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு. கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சந்நிதி. அடுத்து அம்பாள் சந்நிதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி" என அழைக்கப்படுகிறார். பிரார்த்தனை: உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர். காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்.

    Previous Next

    نموذج الاتصال