முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும் சரக்கொன்றை மலர்கள் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சிவனுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது. முடிகொண்டான் ஆற்றுக்கு வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்தது சீயாத்தமங்கை பகுதி. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து ஆசி வழங்க தொடங்கினார். சிவலிங்க திருமேனியில் சிலந்தி அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவதரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் தினமும் அயவந்தீஸ்வரரை, கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவபூஜையின்போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதை கவனித்தார், மங்கையர்கரசியார்.
எம்பெருமான் உடலில் சிலந்தியா? அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆனால் அதை எப்படி அகற்றுவது? என அவருக்கு புரியவில்லை. எனவே வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும், மீண்டும் பலங்கொண்டபடி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது. மனைவியை விட்டு சென்றார் "உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டு விட்டாய். உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்" என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் இல்லம் திரும்பினார்.
மங்கையர்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார். "இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் கணவர் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே" என சிவபெருமானே கதி என இருந்தார். அன்னையாக ஏற்றார் அன்று இரவு திருநீலநக்கர் கனவில் தோன்றினார் இறைவன். "திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை வந்து பார்்" என்றார். விழித்தெழுந்த திருநீலநக்கர் விடியும் முன்பே கோவிலுக்கு ஓடினார். கோவிலில் கருவறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்தி கடித்து புண்ணாகியிருந்தது. இறைவனுக்கு நேர்ந்த துயரை கண்டு திருநீலநக்கர் கண் கலங்கினார். . "சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்" என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். திருநீலநக்கரும் அவரது மனைவியும் சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே ஏற்றுக்கொண்டதை எண்ணி உள்ளம் பூரித்தார். மங்கையர்கரசியாரை தன்னுடன் அழைத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவபெருமான் மேலும் போற்றி வணங்கப்பட்டார். இத்தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோவில் உட்புறத்தோற்றம் சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர்கரசி ஆகியோர் உள்ளனர். மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுதபாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன. மூல நட்சத்திரம் தனியாக இருக்கும் அன்னை சன்னதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டிகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர். வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக நடக்கிறது. முற்காலத்தில் செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி மக்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்த பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு சிறுமி பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள். சிறுமி வடிவில் அம்மன் "என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்" என்று அழைத்து சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தை கண்டு மெய்சிலிர்த்த பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்? என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்த கூட்டமும் அவளை பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்ற ஒரு திருநாமமும் உண்டு. திருமணத்தடை நீக்கும் ஆவணி மூல நட்சத்திர வழிபாடு சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும். ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். குழந்தை பாக்கியம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும். இந்த கோவில் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவிலுக்கு செல்வது எப்படி? சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.