No results found

    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில்


    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப் பாடல்களின் ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். புராண காலத்தில் பிரம்மபுரம், வேணுபுரம், தோனிபுரம், சிவபுரம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் சுமார் 90 அடி உயரமுள்ள கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒரு முறை திருஞானசம்பந்தர் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது பார்வதி தேவியான திருநிலை நாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த தல வரலாறு நினைவு கூறும் விதமாக திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருமுலைப்பால் விழா அன்று திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருள்வார். அங்கு திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடக்கும். அப்பொழுது மலைக் கோவிலிலிருந்து உமாமகேஸ்வரி சாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் எடுத்துவரப்பட்டு தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருள்வார். இதனை அடுத்து பகல் 12 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும்.

    தொடர்ந்து சிவபெருமானுடன் உமா மகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளிப்பார். அப்பொழுது சாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனை அடுத்து பக்தர்கள் கொண்டுவரப்படும் பாலை சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குடமுழுக்கு விழா சீர்காழி சட்டைநாதர் கோவில் இதற்கு முன்பு 25-வது குரு மகா சன்னிதானம் சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் 23.3.1951 அன்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அதற்கு பின்பு 26 ஆவது குரு மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கடந்த 3.4.1991 அன்று குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடந்துள்ளது. அதற்கான இரண்டு கல்வெட்டுக்கள் மலைக் கோவிலில் உள்ளது.

    சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக பிரம்மாண்ட யாக சாலை சீர்காழி சட்டைநாதர் கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி மேற்கு கோபுர வாசல் அருகே மிக பிரம்மாண்டமான யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டு அதில் 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது யாகசாலை முன்புறம் செயற்கையாக கைலாய மலை அமைக்கப்பட்டு இந்த மலையின் வழியாகத்தான் பக்தர்கள் அனைவரும் யாகசாலைக்கு செல்லும் வகையில் பிரம்மாண்டமாக உள்ளது குடமுழுக்கிற்காக யானை, ஒட்டகம், குதிரை வரவழைப்பு சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கடையூர், திருவையாறு, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நான்கு யானைகள், ஒன்பது குதிரைகள், ஒரு ஒட்டகம், காளை மாடு உள்ளிட்டவைகள் வெளி ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் வியப்போடும், ஆச்சரியத்தோடும் பார்த்துதங்களுடைய செல்போன்களில் செல்பி எடுத்து செல்கின்றனர்.

    அட்டபைரவச் சிறப்புத் தலம் காழியின் சிறப்புச் சந்நிதானமாக ஸ்ரீ சட்டைநாதசுவாமி அருளுகின்றபடியாலும், பைரவர்க்குரிய காசி, காழி, நாகை - செங்காட்டங்குடி ஆகியத் தலங்களுள் இதுவும் ஒன்றாகையாலும் பைரவமதம் இங்கே சிறப்புற்று இருந்துள்ளது. சட்டைநாதருக்கு கீழே தென்திசையில் அமைந்துள்ள வலம்புரி மண்டபத்தில் 1.அசிதாங்க பைரவர், 2.குருபைரவர்.3.சண்டபைரவர் 4.குரோதனபைரவர்.5.உன்மத்த பைரவர். 6, கபாலி பைரவர், 7. பீஷண பைரவர், 8, சம்கார பைரவர் என இவ் அட்டபைரவரும் எண் கலையாக விளங்குகின்றனர். சுக்கிர வாரத்திலும் தேய்பிறை அட்டமியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 3 அடுக்குகளை கொண்ட குன்றுக்கோவில் இக்கோவில் மூன்று அடுக்குகளைக்கொண்ட குன்றுக்கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச்செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் 'தோணிமலை' என்கின்றனர். சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, "பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே, " எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே" என்று பாடினார். தந்தை அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். விஷ்ணுவின் தோலை அணிந்த சட்டைநாதர் உலகில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு உண்டு ஏனெனில் இந்த கோவிலில் சிவன் மூன்று வடிவமாக அருள்பாலிக்கிறார். அதாவது லிங்க வடிவமாகவும், விஷ்ணுவின் தோலை சட்டையாக அணிந்து சட்டை நாதர் என்றும், உமா மகேஸ்வரியுடன் தோணியப்பராகவும் அருள் பாலிக்கிறார். இது இந்த கோவிலின் தனி சிறப்பாகும்.

    Previous Next

    نموذج الاتصال